பஞ்சாங்கம்

மற்றவை

மேலும் பஞ்சாங்கம் பற்றி

வருஷம் மாதம் கணக்கிடும் பஞ்சாங்க முறைகள்

பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை 2 சந்திரமான முறை

சௌரமான முறை

இம்முறை சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை

சௌர ஆண்டு கணக்கீடு முறை

ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஒரு வருடம் என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம்

சாயன ஆண்டு கணக்கீடு முறை

சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு)

சந்திரமான முறை

இம்முறை சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மாதங்களாகும். பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு பஞ்சாங்கம்), கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் (கார்த்திக ஷுக்லாதி பஞ்சாங்கம்)

பிற ஐந்திறன் முறைகள்

திருவள்ளுவர் ஆண்டு

திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சக வருட பஞ்சாங்கம்:

இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைப்பிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை.

பசலி வருஷ பஞ்சாங்கம்:

வட இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆண்டுக் கணக்கு. முகலாயர் காலத்தில் அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை நிர்வகிக்க ஏதுவாகத் தோற்றுவிக்கப்பட்டது.

கலியுகாப்தம் பஞ்சாங்கம்

கலியுகம் தோன்றிய நாள் முதல் கணக்கிட்டு வரப்படுகிறது.

விக்கிரம வருஷம்
மகா வீரர் வருஷம்

ஐந்திறன் வகைகள்

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த வேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

திருக்கணித ஐந்திறன் (பஞ்சாங்கம்)

சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனைத் தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கணிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கணிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும்.
தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும்.
இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.